ஆரடித்தார் ஏனழுதாய் அடித்தாரைச் சொல்லி அழு
கண்ணே என் கண்மணியே கடிந்தாரைச் சொல்லி அழு
விளக்கிலிட்ட வெணையைப் போல் வெந்துருகி நிற்கையிலே
கலத்திலிட்ட சோறது போல் கண்கலக்கம் தீர்த்தாயே
வம்புக்கழுதாயோ வாயெல்லாம் பால் வடிய
அத்தை அடித்தாளோ அல்லி மலர்த் தண்டாலே
மாமன் அடித்தானோ மல்லிகைப் பூச் செண்டாலே
அடித்தாரைச் சொல்லி அழு ஆக்கினைகள் செய்து வைப்போம்
கடிந்தாரைச் சொல்லி அழு கைவிலங்கு போட்டு வைப்போம்
தொட்டாரைச் சொல்லி அழு தோள்விலங்கு போட்டு வைப்போம்
மண்ணால் விலங்கு பண்ணித் தண்ணீரிலே போட்டு வைப்போம்
வெண்ணையால் விலங்கு பண்ணி வெய்யிலிலே போட்டு வைப்போம்!
அக்காள் அடித்தாளோ உன்னை அம்மான்மார் வைதாரோ
விக்கவே தேம்புவதேன் வித்தகனே கண்வளராய்
தமையன் அடித்தானோ உனக்கு தயிரூட்டும் கையாலே
நிமிடம் மனம் பொறுத்து நித்திரை செய் எம் கோமகனே
ஆராரோ ஆரிரரோ ஆராரோ ஆரிரரியோ ஆராரோ ஆரிரரோ
ஆராரோ ஆரிரரோ ஆராரோ ஆரிரரோ ஆராரோ ஆரிரரோ
No comments:
Post a Comment